03 March 2012

தணிக்கையின் பரிமாணங்கள் 02. நமது களமும் சூழ்நிலையும்




தணிக்கையின் பரிமாணங்கள்
02.  நமது  களமும் சூழ்நிலையும்

தணிக்கையின் முதல் பரிமாணமாக நாம் கணக்குகளின் சரிபார்ப்பு பணியைத் தேர்வு செய்துள்ளோம் அல்லவா? இதில் நமது களமும் சூழ்நிலையும் தற்போதைய காலக் கட்டத்தில் எவ்வாறு உள்ளன என்பதை  விரிவாக ஆராய்வோம்.

            சரிபார்த்தல் பணியை முழுவதுமாக துவக்கம் முதல் இறுதி வரை வரிசையாக  விடுதலின்றி  மேற்கொள்ள வேண்டுமாஅல்லது  சோதனை முறையில் சரிபார்க்க வேண்டுமா? அல்லது சில இனங்களில் முழுவதுமாகவும் சில இனங்களில் சோதனை முறையிலும் சரிபார்க்கலாமாஎன்பது குறித்தான விவாதங்களைத் தவிர்த்துப் பார்த்தோமானால்நமக்கு அனுமதிக்கப் படும்  குறைந்த காலத்தில் சிறந்தவாறு  தணிக்கைப் பணியை எவ்வாறு மேற்கொள்வதுஎன்பது தான் ஒவ்வொரு தணிக்கையாளர் முன்பும்  உள்ள கேள்வியாக இருக்கிறது.
             
            இவைகள் நமக்கு அதாவது கூட்டுறவுத் தணிக்கைக்கு மட்டும் தோன்றிய புதிய  சூழ்நிலையோ காலத்தின் கட்டாயமோ இல்லை.  இவைகளை நாம் உணர்ந்துள்ளவாறே பட்டயத் தணிக்கையாளர்களும் உணர்ந்துள்ளனர்.   அவர்களது  பணி  அனுபவங்களின் அடிப்படையிலும் கணக்குப் பராமரிப்பில் மிகப்பெரிய ஊடகமாக புகுந்து கலக்கிக் கொண்டிருக்கும்  கணிணிகளின் பயன்பாடு மற்றும்  வணிக நிறுவனங்களின் அசுர வளர்ச்சியின் அடிப்படையிலும்  சில புதிய அணுகு முறைகளையும்    தணிக்கை நடை முறைகளையும் செம்மையாகவும் காலத்திற்கேற்றவாறும் அவர்கள்  வகுத்துக் கொண்டுள்ளனர். அவைகளை நாமும் தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி நமது தணிக்கை முறைகளிலும் புதிய அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ளவேண்டும்.

களத்தில் புதிய சூழ்நிலை
                       
            பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை நமது தணிக்கைப் பணி எவ்வாறு இருந்தது?
            வருடத்திற்கு ஒரு முறை மட்டுமல்லாது  சில நேரங்களில் தொடர் தணிக்கைக்கும் தணிக்கைத் திட்டம் தயாரித்து அனுமதி பெற்றோம். 
            வரவு செலவுகள் ஒன்று விடாமல் சரிபார்த்து முடித்து  அனைத்து துணைப் பதிவேடுகளிலும்  குறுக்குப் பதிவுகளையும் ஒன்று விடாமல்  சரிபார்த்தோம்.
            பொதுவாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான உள்ள சங்கங்கள் தவிர்த்து  அனைத்துச் சங்கங்களிலுமே வரவு செலவுகள் மிகவும் குறைவாக இருந்ததால் நமது  பணி. எளிதாகவும் மன அழுத்தம் இல்லாமலும்  இருந்தது.
            நிதி வழங்கும் வங்கிகளின் மேற்பார்வை என்ற அளவிலான  கண்காணிப்பு, நிர்வாகத் துறையின் ஆய்வின் மூலமான  கண்காணிப்பு ஆகியவற்றோடு அனைத்திற்கும் சிகரமாக பணியாளர்களின் மனப் பான்மை ஆகியவை நமது பணிக்கு பெரும் உதவி கரமாக இருந்தன.

            ஆனால், இப்போதைய சூழ்நிலை முற்றிலும் வித்தியாசமாக அல்லவா உள்ளது?

            சங்கங்களில் ரொக்க வரவு செலவுகள் பெருமளவில் வளர்ந்துள்ள நிலையில், மேற்பார்வை மற்றும் நிர்வாகக் கண்காணிப்புப் பணிகள் சிறப்பாகவும் தீவிரமாகவும் இருந்தால் மட்டுமே தணிக்கையும் சிறப்பானதாக அமையும்.

 Prevention is better than cure  என்பதற்கு முற்றிலும் மாறாக Prevention என்ற தடுப்பு நடவடிக்கை இல்லாத நிலையில் தணிக்கையில் மட்டுமே கணக்குகளை பார்க்க வேண்டிய சூழ்நிலை பல சந்தர்ப்பங்களில் நேர்ந்து விடுவதை பார்க்கிறோம்.

            தடுப்பு நடவடிக்கைகள் இல்லாத நிலையில் தவறுகளுக்கும் மோசடி களுக்கும் தணிக்கையில் கண்டறிந்து சுட்டிக்காட்டாததே  காரணம்  என்ற அளவில் காலம் நகர்ந்து கொண்டி ருக்கிறது. இதன் காரணமாக நமது  பணியும் சுமையும் அதிகமாகியுள்ளன.

புதிய நோக்கில் தணிக்கையின் நோக்கம்.
                       
            பொதுமக்களில் பலர் சாதாரண மாக  தவறுகளையும் மோசடிகளையும் கண்டறிவது தான் தணிக்கை என எண்ணுகின்றனர். ஆனால் தணிக்கையின் நோக்கம் என்பது இதுவல்ல. தணிக்கையின் நோக்கம் என்பது நிதி நிலை அறிக்கைகள் மற்றும் அவைகள் தெளிவு படுத்தும் முடிவுகள் ஆகியவை உண்மையாகவும் நேர்மையாகவும்  உள்ளனவா என்பதைக் கண்டறிவதே ஆகும். மோசடிகளையும் தவறுகளையும் கண்டறிவது என்பது தணிக்கையின் போது ஏற்படும் நிகழ்வாகவே கொள்ளவேண்டும்.

             ஆயினும் மோசடிகளோ தவறுகளோ இருக்கக் கூடும் என்ற அடிப்படையில் தணிக்கையாளர்கள்  தணிக்கையை மேற்கொள்ளவேண்டும். ஏனனெனில் தவறுகளும் மோசடிகளும் தவறான நிதி நிலையை காட்டக் கூடும்
            இந்த அடிப்படையில் தான் பட்டயத் தணிக்கையாளர்கள்  தணிக்கையின் நோக்கத்தை தற்போதைய காலக் கட்டத்தில் முடிவாக வரையறுத்துள்ளனர். இதைப் பார்க்கும்போது பட்டயத் தணிக்கையில் தணிக்கையின் நோக்கத்திலேயே அடிப்படை மாற்றம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது மிகவும் வியப்பாக உள்ளது. 

தணிக்கை துவங்கு முன்னர்.,,,,

            தணிக்கையின் முதல் பணியாக நாம் கையிருப்புப் சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் போது  ஒரு சில நாட்கள் வரவு செலவுகளை பார்க்கும்போதே  பல விபரங்களையும் ஆராய்ந்து தெரிந்து கொண்டு விடலாம். மேலும் இவ்வாறு ஒரு சில நாட்கள் வரவு செலவுகளை பரிசீலனை செய்யும் போது அனைத்து இனங்களும் விடுபடாமல் சம்பந்தப் பட்ட துணை புத்தகங்களுடன் ஒத்துப் பார்க்கப் படவேண்டும், இப்பணிக்கு நாம் செலவிடும் காலம் மிகவும் முக்கியமானதாகும்.

இதில் சற்று கவனம் செலுத்தினோமானால் தணிக்கைக்கு கீழ்க்கண்ட முக்கிய ஆதாரமான  விவரங்கள் கிடைத்து விடும்.  ரொக்கம் சங்கத்தில் எவ்வாறு கையாளப் படுகிறது மற்றும் கணக்கு வைக்கப் படுகிறது ?

  • துணைப் புத்தகப்  பதிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப் பட்டு சரிபார்க்கப் பட்டு கண்காணிக்கப் படுகின்றன?. 
  • நாள்வழிப் பதிவேடு மற்றும் துணைப் புத்தகங்கள் எழுதுவதில் தாமதம் உள்ளதா?
  • கையிருப்பு யார் வசம் உள்ளது?. எவ்வாறு பராமரிக்கப் படுகிறது?
  • சிட்டாக்கள்  காசாளர் மற்றும் அனுமதிக்கும் அலுவலர் ஆகியோரால் தனித் தனியாக பராமரிக்கப் பட்டு வருகிறதா?
  • ரொக்க வரவு செலவுகள் அனைத்தும்  விடுபடாமல் எழுதபபடுகின்றனவா
  • நாள்வழிப் பதிவேடு  சரிபார்க்கப பட்டு கையெழுத்திடப் படுகிறதா?
  • கணக்குகள் கண்காணிப்புக்கு உட்தணிக்கை முறை எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது?

            இவைகள் தணிக்கையில் நாம் பின்னர் கண்டறியும் பலவற்றுக்கும்  அடித்தளம் போல அமையும்.
            உதாரணமாக ஒரு சங்கத்தில் கையிருப்பு சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள செல்லும் போது நாள் வழிப் பதிவேடு பல மாதங்கள் எழுதப் படாமல் இருந்தது என்றாலோ . துணை பதிவேடு கள் பதியப் படாமல் இருந்தன என்றாலோ இவகளை சரிசெய்ய தேவையற்ற காரணங்கள் சொல்லி தாமதம் செய்தாலோ . உட் தணிக்கை முறை எதுவும் கடைபிடிக்கப் படவில்லை என்றாலோ இச்சங்கத்தில் தவறுகளோ மோசடிகளோ நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு தணிக்கை மேற்கொள்ள திட்டமிடுவதே நல்லது. 

திட்டமிடுவதும் செயலாக்கமும்

            சங்கத்தின் கணக்கு வைப்பு நடைமுறைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தணிக்கை மேற்கொள்ளவேண்டிய  ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளவேண்டும். சங்கத்தின் பெயர்களை வரிசையாக எழுதி தணிக்கை செய்யவேண்டிய  தேதிகளை குறிப்பிடும் திட்டத்தை இங்கே சொல்லவில்லை. நாம் தணிக்கை துவங்கிய சங்கத்தில் இருக்கும் கணக்கு வைப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நமக்காக ஒரு தணிக்கை திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பணியை எவ்வாறு துவங்குவது? எந்தெந்த இடத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும?. எதில் நாம் அதிக காலத்தை செலவழிக்க தேவையில்லை? எதில் தவறுகள் இருக்கலாம் என்று நாம் கருதுகிறோம்? எந்த கணக்குகளை முழுமையாக மிகுந்த கண்காணிப்புடனும் பார்க்க வேண்டும் என்பதை திட்டமிடவேண்டும். அந்தத் திட்டத்தின் படி நமது தணிக்கை தொடரப் படவேண்டும். சங்கத்திற்குச் செல்வதற்கு முன்னரே நாமே வரிசை கிரமமாக திட்டம் தீட்டுவதை விட களமும் சூழ்நிலையும் எவ்வாறு உள்ளன என்பதைக் கண்டறிந்து  திட்டமிடுதலே சிறப்பான தாகும் . ராமுவும் சோமுவும் கதையில் வரும் ராமுவை போல திட்டம் தீட்டுவது தவறாகி விடுமல்லவா?.
            கீழ்க்கண்ட வாசகத்தை கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

Knowledge helps you to
 reach your destination
provided
you know what the destination  is.
அறிவு உனது லட்சியத்தை எட்ட உதவும்.
ஆயினும் உனது லட்சியம் என்ன என்பது உனக்கு தெளிவாகத்
தெரிந்து இருக்கவேண்டும் 

இனி தணிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கணக்கீடுகள் பற்றி பார்க்கலாம்.

02 March 2012

தணிக்கையின் பரிமாணங்கள் 01 புதியவைகளை வரவேற்போம்.

தணிக்கையின் பரிமாணங்கள்   
01  புதியவைகளை வரவேற்போம்.
வணக்கம் நண்பர்களே!

            தணிக்கையாளருக்கான பத்து கட்டளைகள் என்ற கட்டுரையை தணிக்கை மலர் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொண்ட பின்னர்  தணிக்கை மலர் என்ற சிறப்பு மிக்க ஊடகத்தின் மூலம் தொடர் கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என்பது எனது நீண்ட கால ஆர்வமாக இருந்தது. எனினும் இம்மாதிரி ஒரு கட்டுரையைத் துவக்கும்போது எந்த தலைப்பில் எவ்வாறு  எழுதுவது? அதன் நோக்கம் மற்றும்  அணுக வேண்டிய விவரங்கள் என்ன? அவைகளுக்கு என நாம் வகுத்துக் கொள்ளவேண்டிய எல்லைகள் அல்லது வரையறைகளை எவ்வாறு வைத்துக் கொள்வது  என்பதையெல்லாம் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டிய தாயிற்று.
             
            தணிக்கையை பற்றியும், அதில் நாம் சந்திக்கும் பல்வேறான பிரச்சினைகள் குறித்தும்  எடுத்துரைக்க வேண்டும். பிரச்சினைகள் நேரும் போது எதிர்கொள்வதும், அவைகள் நேராமல் தவிர்ப்பதும் ஆலோசிக்கப் படவேண்டும். புதிய பரிமாணங்கள், புதிய நடைமுறைகளை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளவும், அவைகளை ஆராய்ச்சி பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் நடைமுறைப் படுத்தவும்  அனைவரும் முன்வரவேண்டும். காலம், வளர்ச்சி, சூழ்நிலை அனைத்தையும் அனுசரித்து நமது பணிகளைச் செம்மைப் படுத்தவும் செயல் படுத்தவும் ஊக்கம் அளிக்கப் படவேண்டும். நமது பணிகளை நேர்மையுடனும்,   துணிவுடனும் செயலாக்கம் செய்ய     பழக்கப் படவேண்டும். இவைகள் அனைத்தையும் மனதில் இறுத்தி முயன்று பார்க்கலாம் என்பது தான் ஒவ்வொரு தணிக்கையாளரின் இதயத் துடிப்பாக இருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில்  ஒருவனாக என்னை எண்ணிக்கொண்டு தான் இதைத் தொடங்குகிறேன். சின்னக் குழந்தை நடை பயில்வதைப் போன்றது தான் எனது முயற்சி .

பரிமாணமா அல்லது பரிணாமமா?
           
            தலைப்பினை தேர்வு செய்வதில் எனக்கு ஒரு கணம்  தெளிவின்மை தோன்றி மறைந்தது. இதை தணிக்கையின் பரிணாமம் (Evolution of Audit) என்று துவக்கலாமா அல்லது தணிக்கையின் பரிமாணம் (Dimension of Audit)      என்று துவக்கலாமாஎந்த  தலைப்பை ஏற்றுக் கொண்டால்¢ எழுதும் எல்லைகள் அகன்றதாக இருக்கும்? என்பதை நிலைநிறுத்திப் பார்த்த போது தணிக்கையின் பரிமாணம் என்பது தான் சரியானதாகத் தோன்றியது. பரிமாணம்  என்பது அதன் பன்முக வளர்ச்சியைக் குறிப்பதோடு அல்லாமல் அதன் அளவு கோல்களையும் வரையறை களையும் தெளிவாகக் குறிப்பிடும் சிறப்புச் சொல்லாக அமைகிறது. ஆனால் பரிணாமம் என்று சொன்னால் தேவை நோக்கிய வளர்ச்சி அல்லது தணிக்கையின் கதை  என்று மட்டுமே பொருள்பட்டு எழுதும் எல்லைகள் மிகவும் சுருங்கிவிடும். மேலும் பரிணாமம் பொதுவாக ஒருமையில் பயன் படுத்தும் சொல். பரிமாணம் என்பதோ பொதுவாக பன்மையிலேயே பயன்படுத்தப் பட்டு வருகிறது. 

தணிக்கையின் பரிமாணங்கள்

            முதலாவதாக தணிக்கையின் பரிமாணங்கள் என்பதை நாம்   எவ்வாறு
எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.      
           
             பரிமாணம் (Dimension) என்ற சொல்லுக்கு அளவுகள் என்பது பொதுவான பொருள் ஆகும். முப்பரிமாணம் என்றால் நீளம் அகலம் ஆகியவற்றுடன் கனமும்  சேர்ந்த அளவாகும் என்பதை நாம் அறிவோம்.

            அருகருகே உள்ள இரண்டு கண்களால் காணும்  இரு வேறு காட்சியை  ஒருங்கிணைத்து மனித மூளை பார்க்கும் போது அக்காட்சி நமக்கு மூன்றாவது பரிமாணத்தையும் புலப்படுத்திக் காட்டுகிறது.  இதையே 3 D என்கிறோம்.நாம் இரண்டு கண்களைப் பெற்றதன் பயன்களில்  இதுவுமொன்று. எனவே தான் 3 D காட்சிகளை எடுக்க இரண்டு காமிராக்களை பயன் படுத்தி படம் எடுத்து ஒரே திரையில் தெரிய வைக்கிறார்கள். பரிமாணங்களைப் பற்றி பெரும் அளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அறிவியலை நோக்கி சிறிது  நகர்ந்து விட்டேன். மன்னிக்கவும்.

            கூட்டுறவுத் தணிக்கையையும் முப்பரிமாணம் உடையதாக நாம் இப்போது வைத்துக் கொள்ளப் போகிறோம். ஏனெனில் நாம் சாதாரணத் தணிக்கையிலிருந்து அதிகப் படியாக நகர்ந்து கூட்டுறவுக் கொள்கைகளைச் செயல் படுத்துவதையும் தவணை தவறிய சொத்துக்களை     பரிசீலனை செய்வதையும் மூன்றாவது பரிமாண மாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறோம். 

இனி நமது தணிக்கைப் பணிக்கு வருவோம். நமது தணிக்கை நாம் நகர்ந்து வரும் பாதைகளின் படி கீழ்க்கண்ட மூன்று படிகளைக் கொண்டதாக உள்ளது.
01.  (எந்திர கதியில்?) சரிபார்ப்பு                             (Mechanical checking)
02. பரிசீலனை மற்றும் பகுப்பாய்வு                    (Examination  and Analisis)
03.       முடிவுகளைத் தொகுத்தளித்தல்        (Presentation of results of audit)

             சரியோ தவறோ இந்த மூன்று பணிகளையும் உள்ளடக்கியதாகத் தான்  நமது தணிக்கைப் பணி உள்ளது? இதில் எந்தப் பணி முக்கியமானது? நமது குறுகிய காலக் கட்டத்தில்  எதில் நேரம் அதிகம் செலவிடப் படவேண்டும்என்பதில் தான் நம் கருத்துக்கள் வேறுபடுகின்றன. 
           
            ஆயினும் ஒன்றில் மட்டும் கடந்த சில வருடங்களாக மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் நம்மிடையே உருவாகியுள்ளது என்பது உண்மையே.  அது என்னவெனில் மேற்¢கண்ட மூன்று படிகளில் இரண்டாவதாக உள்ள  பரிசீலனை மற்றும் பகுப்பாய்வு  மற்றும் மூன்றாவதாக உள்ள  முடிவுகளைத் தொகுத்து அளித்தல் ஆகியவற்றில்  நாம் தற்பொழுது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். இதுவே இத் தருணத்தில் தேவைப் படும். மிகப் பெரிய மாற்றம் என்பதோடு  பட்டயத் தணிக்கைக்கு ஈடுகொடுக்கும் மகத்தான வளர்ச்சி என்றும் சொல்லலாம். 

01. சரிபார்ப்பு (Mechanical Checking)

            அனைத்துத்      தணிக்கையாளர்களுக்கும் பழக்கமான சொல் தான் இது. தணிக்கை பார்க்க வேண்டிய புத்தகங்களின் பதிவுகளை தொடர்புடைய ஆவணங்களுடன் சரிபார்க்கும் பணி என்று இதைச் சுருக்கமாகச் சொல்லலாம். விரிவாக நோக்கும்போது தணிக்கையில் சரிபார்த்தல் என்ற சொல் சட்டம், விதிகள், துணைவிதிகள் நிர்வாக பதிவாளர்களின் சுற்றறிக்கைகள் அனைத்துக்கும் உட்பட்டு பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் பணி என்றும்  பொருள் படுகிறதல்லவா? நாம் இதனை தணிக்கை செய்தேன் என்றோ, பரிசீலனை செய்தேன் என்றோ சோதனை செய்தேன் என்றோ  அல்லது சரிபார்த்தேன் என்றோ எப்படி சொன்னாலும் நமது பணி மேற்கண்டவற்றை உள்ளடக்கியது தான் என்பதை மறுப்பதற்கில்லை. நமக்குத் தெரிந்த வரையில் நிறுவனங்களில் வரவு செலவுகள் பல்லாயிரம் மடங்கு அதிகரித்திருக்கும் தற்போதைய  நிலையில்   தணிக்கைப் பணியில் அதிகமான நேரத்தை விழுங்கிவிடும்  (time consuming) பணியாகவும் மன உளைச்சலை (monotonous)  விளைவிக்கும் பணியாகவும்  உள்ளதையும்  யாரும் இங்கே மறுப்பதற்கில்லை. இதற்குப் பொதுவான காரணங்கள் தான் யாவை?

  •             வரவு செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.

  •             நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு கணக்குகள் முறையாகப்  பேணிப் பராமரிக்கப் படவில்லை.

  •             சரிபார்த்தல் பணிக்கு போதிய கால அவகாசம் இல்லை.

  •             மன உளைச்சலைத் தரும் இப்பணியில் எட்டப் படும் முடிவுகள் மட்டுமே  தணிக்கையின் நோக்கத்திற்கு முழுமையாக ஈடு    கொடுப்பவையாக இல்லை.

            தணிக்கையாளர்கள் என்றாலே ஆரம்ப தேதி முதல் ஆண்டு முடிவு வரை அனைத்து புத்தகங்களையும் ஆவணங்களையும் ஒன்று விடாமல் மாங்கு மாங்கென்று டிக் அடித்த பின்னர் தான் மூச்சு விடுவார்கள் என்று காலங் காலமாக சொல்லி வந்த, செய்து வந்த பணிகளுக்கு இப்போதைதேவைப்படும் காலம் ஒதுக்க முடியாமல் போய் விட்டதே? இந்த நடைமுறை சரிதானா? இதற்கு ஏதேனும் பாதுகாப்பு உள்ளதா? சிந்திக்க வேண்டிய நேரம் இது.

            அப்பன் குப்பன் சுப்பன் கதையில் சொன்னதை போன்று நமது தணிக்கைப் பணிகளிலும் காலம் சார்ந்த அறிவையும் அளவு முறைகளையும் பயன் படுத்தவேண்டியது அவசியமாக உள்ளது.
           
            அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது 'நமது களமும் சூழ்நிலையும்' பற்றியதாகும். நமது துறையின் களப் பணியாளர்களின் களம் கூட்டுறவுச் சங்கங்கள். அங்கே தணிக்கை செய்வதற்கான சூழ்நிலைகள் எப்படி உள்ளன? விரிவாகப் பார்ப்போம்.

28 February 2012

தணிக்கை எனக்கு பல வாழ்க்கை பாடங்களை கற்று தந்தது

தணிக்கை எனக்கு பல வாழ்க்கை பாடங்களை கற்று தந்தது

26 January 2012

தணிக்கை ஒரு சமுதாய பணி

தணிக்கை ஒரு சிறந்த பணி. அதில் ஆர்வம் இருந்தால் நிறைய சாதிக்கலாம். நன்மை செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இதை பயன்படுத்த முடியும் 

21 January 2012

Ganapathiraman Incometax Calcuator 2011-2012

ganapathiraman incometax Calculator-for-TN-Govt-officers-2011-2012

On linking the above url, you will see scribed.log in screen. You should register with this website to download the Incometax Calculator for Tamilnadu Government Officers 2011-2012. After registering with this website giving your e mail address etc. you can download the workbook.  Ganapathiraman. rganapathiraman@gmail.com

எங்கே போய் கொண்டிருக்கிறோம்?

இன்று நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் நொந்து போகிறது. மேடை பேச்சிலும் கவர்ச்சி எழுத்திலும் நேரத்தை போக்கும் நமக்கு செயல்பாடு என்பது கனவாக இருக்கிறது  பேசுவதிலும் எழுதுவதிலும் கிடைக்கும் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் செயல்பாட்டில் தான் நமக்கு மன அமைதியை கொடுக்கும் என்பதை நாம் எண்ணி பார்ப்பதில்லை