தணிக்கையின் பரிமாணங்கள்
02.  நமது  களமும் சூழ்நிலையும்
தணிக்கையின் முதல் பரிமாணமாக நாம் கணக்குகளின் சரிபார்ப்பு பணியைத் தேர்வு செய்துள்ளோம்
அல்லவா? இதில் நமது களமும் சூழ்நிலையும் தற்போதைய காலக் கட்டத்தில் எவ்வாறு உள்ளன என்பதை  விரிவாக ஆராய்வோம். 
            சரிபார்த்தல் பணியை முழுவதுமாக துவக்கம் முதல் இறுதி வரை வரிசையாக  விடுதலின்றி 
மேற்கொள்ள வேண்டுமா?  அல்லது  சோதனை முறையில் சரிபார்க்க வேண்டுமா? அல்லது சில இனங்களில்
முழுவதுமாகவும் சில இனங்களில் சோதனை முறையிலும் சரிபார்க்கலாமா?  என்பது குறித்தான விவாதங்களைத் தவிர்த்துப் பார்த்தோமானால்,  நமக்கு அனுமதிக்கப் படும் 
குறைந்த காலத்தில் சிறந்தவாறு  தணிக்கைப்
பணியை எவ்வாறு மேற்கொள்வது?  என்பது தான் ஒவ்வொரு
தணிக்கையாளர் முன்பும்  உள்ள கேள்வியாக இருக்கிறது.
            இவைகள் நமக்கு அதாவது கூட்டுறவுத் தணிக்கைக்கு மட்டும் தோன்றிய
புதிய  சூழ்நிலையோ காலத்தின் கட்டாயமோ இல்லை.  இவைகளை நாம் உணர்ந்துள்ளவாறே பட்டயத் தணிக்கையாளர்களும்
உணர்ந்துள்ளனர்.   அவர்களது  பணி  அனுபவங்களின்
அடிப்படையிலும் கணக்குப் பராமரிப்பில் மிகப்பெரிய ஊடகமாக புகுந்து கலக்கிக் கொண்டிருக்கும்  கணிணிகளின் பயன்பாடு மற்றும்  வணிக நிறுவனங்களின் அசுர வளர்ச்சியின் அடிப்படையிலும்  சில புதிய அணுகு முறைகளையும்    தணிக்கை நடை முறைகளையும் செம்மையாகவும் காலத்திற்கேற்றவாறும்
அவர்கள்  வகுத்துக் கொண்டுள்ளனர். அவைகளை நாமும்
தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி நமது தணிக்கை முறைகளிலும் புதிய அணுகுமுறைகளை வகுத்துக்
கொள்ளவேண்டும். 
களத்தில் புதிய சூழ்நிலை
            பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை நமது தணிக்கைப் பணி எவ்வாறு இருந்தது? 
            வருடத்திற்கு ஒரு முறை மட்டுமல்லாது  சில நேரங்களில் தொடர் தணிக்கைக்கும் தணிக்கைத் திட்டம்
தயாரித்து அனுமதி பெற்றோம்.  
            வரவு செலவுகள் ஒன்று விடாமல் சரிபார்த்து
முடித்து  அனைத்து துணைப் பதிவேடுகளிலும்  குறுக்குப் பதிவுகளையும் ஒன்று விடாமல்  சரிபார்த்தோம். 
            பொதுவாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான
உள்ள சங்கங்கள் தவிர்த்து  அனைத்துச் சங்கங்களிலுமே
வரவு செலவுகள் மிகவும் குறைவாக இருந்ததால் நமது 
பணி. எளிதாகவும் மன அழுத்தம் இல்லாமலும் 
இருந்தது.
            நிதி வழங்கும் வங்கிகளின் மேற்பார்வை என்ற
அளவிலான  கண்காணிப்பு, நிர்வாகத் துறையின்
ஆய்வின் மூலமான  கண்காணிப்பு ஆகியவற்றோடு அனைத்திற்கும்
சிகரமாக பணியாளர்களின் மனப் பான்மை ஆகியவை நமது பணிக்கு பெரும் உதவி கரமாக இருந்தன.
            ஆனால், இப்போதைய சூழ்நிலை முற்றிலும் வித்தியாசமாக அல்லவா உள்ளது?
            சங்கங்களில் ரொக்க வரவு செலவுகள் பெருமளவில் வளர்ந்துள்ள நிலையில், மேற்பார்வை மற்றும்
நிர்வாகக் கண்காணிப்புப் பணிகள் சிறப்பாகவும் தீவிரமாகவும் இருந்தால் மட்டுமே தணிக்கையும்
சிறப்பானதாக அமையும். 
 Prevention is better than cure  என்பதற்கு முற்றிலும்
மாறாக Prevention என்ற தடுப்பு நடவடிக்கை இல்லாத நிலையில் தணிக்கையில் மட்டுமே கணக்குகளை பார்க்க
வேண்டிய சூழ்நிலை பல சந்தர்ப்பங்களில் நேர்ந்து விடுவதை பார்க்கிறோம். 
            தடுப்பு நடவடிக்கைகள் இல்லாத நிலையில் தவறுகளுக்கும் மோசடி களுக்கும் தணிக்கையில்
கண்டறிந்து சுட்டிக்காட்டாததே  காரணம்  என்ற அளவில் காலம் நகர்ந்து கொண்டி ருக்கிறது. இதன்
காரணமாக நமது  பணியும் சுமையும் அதிகமாகியுள்ளன.
புதிய நோக்கில் தணிக்கையின் நோக்கம். 
            பொதுமக்களில் பலர் சாதாரண மாக  தவறுகளையும்
மோசடிகளையும் கண்டறிவது தான் தணிக்கை என எண்ணுகின்றனர். ஆனால் தணிக்கையின் நோக்கம்
என்பது இதுவல்ல. தணிக்கையின் நோக்கம் என்பது நிதி நிலை அறிக்கைகள் மற்றும் அவைகள் தெளிவு
படுத்தும் முடிவுகள் ஆகியவை உண்மையாகவும் நேர்மையாகவும்  உள்ளனவா என்பதைக் கண்டறிவதே ஆகும். மோசடிகளையும்
தவறுகளையும் கண்டறிவது என்பது தணிக்கையின் போது ஏற்படும் நிகழ்வாகவே கொள்ளவேண்டும்.
             ஆயினும் மோசடிகளோ தவறுகளோ இருக்கக் கூடும்
என்ற அடிப்படையில் தணிக்கையாளர்கள்  தணிக்கையை
மேற்கொள்ளவேண்டும். ஏனனெனில் தவறுகளும் மோசடிகளும் தவறான நிதி நிலையை காட்டக் கூடும்
            இந்த அடிப்படையில் தான் பட்டயத் தணிக்கையாளர்கள்  தணிக்கையின் நோக்கத்தை தற்போதைய காலக் கட்டத்தில்
முடிவாக வரையறுத்துள்ளனர். இதைப் பார்க்கும்போது பட்டயத் தணிக்கையில் தணிக்கையின் நோக்கத்திலேயே
அடிப்படை மாற்றம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது மிகவும் வியப்பாக உள்ளது.  
தணிக்கை துவங்கு முன்னர்.,,,,
            தணிக்கையின் முதல் பணியாக நாம் கையிருப்புப் சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும்
போது  ஒரு சில நாட்கள் வரவு செலவுகளை பார்க்கும்போதே  பல விபரங்களையும் ஆராய்ந்து தெரிந்து கொண்டு விடலாம்.
மேலும் இவ்வாறு ஒரு சில நாட்கள் வரவு செலவுகளை பரிசீலனை செய்யும் போது அனைத்து இனங்களும்
விடுபடாமல் சம்பந்தப் பட்ட துணை புத்தகங்களுடன் ஒத்துப் பார்க்கப் படவேண்டும், இப்பணிக்கு நாம் செலவிடும்
காலம் மிகவும் முக்கியமானதாகும். 
இதில் சற்று கவனம்
செலுத்தினோமானால் தணிக்கைக்கு கீழ்க்கண்ட முக்கிய ஆதாரமான  விவரங்கள் கிடைத்து விடும்.  ரொக்கம் சங்கத்தில் எவ்வாறு கையாளப் படுகிறது மற்றும்
கணக்கு வைக்கப் படுகிறது ?
- துணைப் புத்தகப் பதிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப் பட்டு சரிபார்க்கப் பட்டு கண்காணிக்கப் படுகின்றன?.
- நாள்வழிப் பதிவேடு மற்றும் துணைப் புத்தகங்கள் எழுதுவதில் தாமதம் உள்ளதா?
- கையிருப்பு யார் வசம் உள்ளது?. எவ்வாறு பராமரிக்கப் படுகிறது?
- சிட்டாக்கள் காசாளர் மற்றும் அனுமதிக்கும் அலுவலர் ஆகியோரால் தனித் தனியாக பராமரிக்கப் பட்டு வருகிறதா?
- ரொக்க வரவு செலவுகள் அனைத்தும் விடுபடாமல் எழுதபபடுகின்றனவா
- நாள்வழிப் பதிவேடு சரிபார்க்கப பட்டு கையெழுத்திடப் படுகிறதா?
- கணக்குகள் கண்காணிப்புக்கு உட்தணிக்கை முறை எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது?
            இவைகள் தணிக்கையில் நாம் பின்னர் கண்டறியும் பலவற்றுக்கும்  அடித்தளம் போல அமையும். 
            உதாரணமாக ஒரு சங்கத்தில்
கையிருப்பு சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள செல்லும் போது நாள்
வழிப் பதிவேடு பல மாதங்கள் எழுதப் படாமல் இருந்தது என்றாலோ . துணை பதிவேடு கள் பதியப்
படாமல் இருந்தன என்றாலோ இவகளை சரிசெய்ய தேவையற்ற காரணங்கள் சொல்லி தாமதம் செய்தாலோ
. உட் தணிக்கை முறை எதுவும் கடைபிடிக்கப் படவில்லை என்றாலோ இச்சங்கத்தில் தவறுகளோ மோசடிகளோ
நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு தணிக்கை
மேற்கொள்ள திட்டமிடுவதே நல்லது.  
திட்டமிடுவதும் செயலாக்கமும்
            சங்கத்தின் கணக்கு வைப்பு நடைமுறைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தணிக்கை மேற்கொள்ளவேண்டிய  ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளவேண்டும். சங்கத்தின்
பெயர்களை வரிசையாக எழுதி தணிக்கை செய்யவேண்டிய 
தேதிகளை குறிப்பிடும் திட்டத்தை இங்கே சொல்லவில்லை. நாம் தணிக்கை துவங்கிய சங்கத்தில்
இருக்கும் கணக்கு வைப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நமக்காக ஒரு தணிக்கை திட்டத்தை
உருவாக்கிக் கொள்ள வேண்டும். பணியை எவ்வாறு துவங்குவது? எந்தெந்த இடத்தில்
நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும?.
எதில் நாம் அதிக காலத்தை செலவழிக்க தேவையில்லை? எதில் தவறுகள் இருக்கலாம்
என்று நாம் கருதுகிறோம்? எந்த கணக்குகளை முழுமையாக மிகுந்த கண்காணிப்புடனும் பார்க்க
வேண்டும் என்பதை திட்டமிடவேண்டும். அந்தத் திட்டத்தின் படி நமது தணிக்கை தொடரப் படவேண்டும்.
சங்கத்திற்குச் செல்வதற்கு முன்னரே நாமே வரிசை கிரமமாக திட்டம் தீட்டுவதை விட களமும்
சூழ்நிலையும் எவ்வாறு உள்ளன என்பதைக் கண்டறிந்து 
திட்டமிடுதலே சிறப்பான தாகும் . ராமுவும் சோமுவும் கதையில் வரும் ராமுவை போல
திட்டம் தீட்டுவது தவறாகி விடுமல்லவா?.
            கீழ்க்கண்ட வாசகத்தை கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். 
Knowledge helps you to
 reach your
destination 
provided 
you know what the destination  is.
அறிவு உனது லட்சியத்தை
எட்ட உதவும். 
ஆயினும் உனது லட்சியம்
என்ன என்பது உனக்கு தெளிவாகத் 
தெரிந்து இருக்கவேண்டும் 
இனி தணிக்கையாளர்கள்
தெரிந்து கொள்ள வேண்டிய கணக்கீடுகள் பற்றி பார்க்கலாம். 
